Thursday, May 28, 2020

அத்யாத்ம ராமாயணம் - வேள்விக் காப்பு /அகலிகையின் துதி

பராசக்தி 🙏

This is a Translation of a portion from the Malayalam Book "Adyaathma Ramayanam
Malayalam - SwamiChidananda Saraswathi , which is an explanation for the Adyaathma Ramayanam in Malayalam by EZHUTHACHAN.



வேள்வி காத்தல் / அகலிகையின் துதி

அன்றிரவு விஸ்வாமித்திர மஹரிஷியும் ராமலக்ஷ்மணர்களும் காமாசிரமம் என்ற இடத்தில் தங்கினார்கள். அடுத்த நாள் காலை புறப்பட்டு உச்சிவேளை ஆகும்போது சித்தாஸ்ரமம் என்ற இடத்தை அடைந்தார்கள்.  அதுதான் விசுவமித்திர மகரிஷி வழக்கமாகக் தவம் செய்யுமிடம். ஆசிரமத்தில் இருந்த முனிவர்கள் விசுவமித்திர மகரிஷியின் கட்டளைக்கிணங்க ராம லட்சுமணர்களை வரவேற்று உபசரித்தனர். அடுத்த நாள் ஸ்ரீராமன் விஸ்வாமித்திர மகரிஷியிடம்  "மகரிஷி அவர்களே! தாங்கள் வேள்விக்குத்  தேவையான விரதங்களை எடுத்துக்கொண்டு வேள்வியைத் தொடங்குங்கள்.  கீழ்த்தரமான அந்த அரக்கர்கள் வரும்போது எங்களுக்கு அவர்களைக் காண்பியுங்கள்.  நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்" என்று சொன்னார். 'அப்படியே ஆகட்டும்' என்று சொல்லி விஸ்வாமித்திரரும் மற்ற முனிவர்களோடு வேள்வியைத் தொடங்கினார்.  உச்சிவேளை ஆகும்போது மாரீசன், சுபாகு என்று பெயர் கொண்ட அந்த அரக்கர்கள் இன்னும் சில அரக்கர்களுடன் கூடி அந்தரத்தில் காட்சியளித்து, வேள்விக்குழியில் ரத்தம் எலும்புத்துண்டுகள் முதலியவற்றை மழைபோல் பொழியத் தொடங்கினர். ராமன் உடனே வில்லை எடுத்து மந்திரத்தை உச்சரித்து பெரும் சக்தி கொண்ட இரண்டு அம்புகளை அவர்கள் இருவரின் மேலும் ஏவினார். அந்த அம்புகளில் ஒன்று வாயுவாஸ்திரம் . அது சுபாகு என்ற அரக்கனைப் பெருத்த புயல் காற்றால் சுழற்றிச் சுழற்றி நூறு காத  தூரத்தில் இருந்த கடலில் கொண்டு போய் அமிழ்த்தியது. அதைக் கண்டவர்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்தனர். இன்னொரு அம்பு அக்னியாஸ்திரம்.  அது கடலில் அழுத்தப்பட்ட சுபாகுவை வெளியே எடுத்து எரித்து சாம்பலாக்கி விட்டது. மற்ற அரக்கர்களை இலக்குவன் கொன்றுவிட்டான். தேவர்கள் ராம லட்சுமணர் மீது பூமாரி பெய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வாழ்த்துக் கூறினர் . ஆகாயத்தில் தேவ வாத்தியங்கள் முழங்கின. சித்தர்களும் சாரணர்களும் ராம லட்சுமணர்களை வணங்கித் துதி பாடினர். 

விச்வாமித்திரர் ராமனையும்  இலக்குவனையும் நன்முறையில் உபசரித்தார். இருவரையும் மடியில் இருத்தி இறுகக் கட்டிக்கொண்டு  ஆனந்தக் கண்ணீர் சொரிந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இனிப்பான பல பழங்களைக் கொடுத்து உண்ணச் செய்தார் . புராணக்கதைகள் பலவற்றையும் அவர்களுக்குச் சொல்லி, மூன்று நாட்கள் சித்தாச்ரமத்தில் அவர்களைத் தங்கச்செய்தார்.  
நான்காம் நாள் விடியற்காலையில் விசுவாமித்திரர் பின்வருமாறு சொன்னார்: "ராமா! விதேக ராஜாவின் நகரில் ஒரு வேள்வி நடந்துகொண்டிருக்கிறது. அங்கே பரமசிவனின் மிகச் சிறப்பும் சக்தியும் வாய்ந்த ஒரு வில்லும் இருக்கிறது. நாம் அங்கு சென்று அந்த வேள்வியில் பங்கு கொள்வோம். அப்படியே அந்த சிறப்பு வாய்ந்த சிவனின் வில்லையும் கண்டு வணங்குவோம் .அங்கே செல்வோம் வாருங்கள். அரசன் ஜனகன்உங்கள் இருவரையும் வரவேற்று உபசரிப்பார்." 

இவ்வாறு சொல்லி விசுவாமித்திர முனிவர் ராம லட்சுமணர்களோடு மிதிலையை நோக்கிப் புறப்பட்டார் .பிரயாணத்தின் இடையே அவர்கள் கங்கா நதிக் கரையை அடைந்தனர். அங்குதான் இருந்தது கௌதம மகரிஷியின் ஆசிரமம்.  மிகுந்த அழகும் மணமும் வாய்ந்த மலர்களும், மிக்க இனிப்புடைய பல பழங்களும் கொண்ட பல செடிகளும் மரங்களும் அங்கே மிக அதிக அளவில் வளர்ந்து செழித்திருந்தன. மிருகங்களோ, பறவைகளோ,  மற்ற உயிரினங்களோ ஒன்றுமே அங்கே காணப்படவில்லை. அந்த இடத்தைப் பார்த்த ராமன்  "இது  யாருடைய ஆசிரமம்?  மிகுந்த பழங்களும் பூக்களும் நிறைந்த மரங்களும் செடிகளும் இங்கே காணப்படுகின்றன . ஆனால் உயிரினங்கள் ஒன்றையும் கூட இங்கே காணவில்லையே!  இந்த இடத்தை அடைந்தபோது என் மனதில் சொல்லமடியாத மகிழ்ச்சி உண்டாகிறது. குருவே! தாங்கள்தான் இதனைக் குறித்து எங்களுக்குச் சொல்லவேண்டும்" என்றான். 

விசுவாமித்திர முனிவர் சொன்னார்:  "ராமா! பண்டைக் காலத்தில் நடந்த ஒரு கதை இது.  கௌதம மகரிஷி அறத்தைப் பின்பற்றிப்  பாதுகாக்கும் ஒரு அற்புத முனிவர் . அனைவராலும் அறியப்பட்டவர். மிகவும் மதிக்கப்பட்டவர். திருமாலை நோக்கித் தவம் இருந்த அவர் இந்த ஆசிரமத்தில் தான் வசித்து வந்தார். அன்னாரின் சிறந்த தவத்தைக் கண்டு மகிழ்ந்த பிரம்மதேவன் உலகிலேயே மிகவும் அழகானவராகக் கருதப்படுகிற அகலிகை என்ற பெண்ணை கௌதமனுக்கு மனைவி ஆக்கினார். அகலிகையும் மிகவும் மதிப்போடும் சிறந்த பக்தியோடும் முனிவரான கௌதமருக்கு எல்லாப் பணிவிடைகளையும் செய்து வந்தாள். தவசிகளில் மிகவும் சிறந்தவரான கௌதமர் அகலிகையோடு இந்த இடத்தில் வசித்து கொண்டு தவம் புரிந்து வந்தார்.

அகலிகையின் மேல் தகாத ஆசை வைத்த இந்திரன் ஒரு நாள் முனிவர் குளிப்பதற்காக நதிக்குச் சென்றிருந்த நேரத்தில் முனிவரது வேடம் தரித்து அவரது குடிலுக்குள் நுழைந்து அகலிகையுடன் கலந்தான்‌‌ . வந்த செயல் முடிந்தவுடன் அங்கிருந்து கிளம்பி வெளியே வந்தான். அதற்குள்ளாக குளிப்பதற்காக நதிக்குச் சென்ற முனிவர் குளியல் முடிந்து திரும்பி வந்துவிட்டார். தனது குடிலின் வாயிலில் தனது உருவத்தை எடுத்துக்கொண்டு ஒருவன் வெளிவருவதை பார்த்து மிகுந்த கோபம் கொண்டார். "என்னுடைய உருவம் அணிந்த கீழ்த்தரமான புத்தியுடைய நீ யாரடா? உண்மையைச் சொல். இல்லையென்றால் நான் இப்போதே உன்னை சபித்துச் சாம்பலாக்கி விடுவேன்"என்றார். பயந்து நடுங்கிய இந்திரன், " நான் தேவர்களுக்கு அரசனான இந்திரன். காமத்திற்கு அடிமையான நான் இந்தக் கீழ்த்தரமான செயலைச் செய்து விட்டேன். தாங்கள் என்னை மன்னித்துக் காப்பாற்றி அருள வேண்டும்" என்று பலமுறை வேண்டினான். "மாற்றான் மனைவி மேல் தகாத ஆசை வைத்து காமத்தால் கண்ணிழந்து திரியும் நீ ஆயிரம் ஆண்குறிகள் உடையவனாகக் கடவது" என்று சபித்து விட்டார்.  பயத்தால் நடுங்கி கை தொழுது கொண்டு நிற்கின்ற அகலிகையிடம் கௌதமர் சொன்னார்: "பிழை புரிந்தவளே!  நீ இதே ஆசிரமத்தில் சிலையாகப் போகக்  கடவாய் !  ஆகாரம் ஒன்றுமில்லாமல் இரவும் பகலும் தவம் செய்துகொண்டு நீ இங்கேயே கிடப்பாய். வெயிலையும் மழையையும் பனியையும் பொறுத்துக் கொண்டு அனைத்துலகும் ஆனவனான இறைவனை மனதில் வைத்துத் தவம் செய்வாயாக.  இந்த ஆசிரமத்தில் இன்று முதல் எந்தவிதமான உயிரினங்களும் இல்லாது போகக் கடவது! அநேக ஆயிரம் வருடங்கள் தவம்செய்து நீ வாழும்போது ஒரு நாள் தசரத மைந்தன் இராமன் தன் தம்பியோடு இந்த இடத்திற்கு வருவான். சிலை உருவமாக இருக்கும் உன்னைக் காலால் தொடுவான்.  அப்போது உன் பாவங்கள் தீர்ந்து நீ பழைய உருவத்தை அடைவாய் . உடனே ராமனைச் சுற்றி வலம் வந்து விழுந்து வணங்கி பக்தியோடு துதிப்பாயாக ! அதோடு உனது சாபம் தீர்ந்து,  நீ முன்போல என்னை அடைந்து , பணிவிடைகள் செய்து வாழ்வினைத்  தொடருவாயாக!" 

இவ்வாறு மொழிந்த அருளிய கௌதம முனிவர் தவம் செய்வதற்காக இமயமலையை நோக்கிச் சென்றார். (அறியாமல் செய்த  தவறாயினும் அன்னியனாகிய இந்திரன் தீண்டியதால் அகலிகையின் கற்புக்குத் தீங்கு நேர்ந்ததே! அந்தப் பாவம் தீருவதற்காகத்தான் சிலை உருவத்தில் இருந்து தவம் செய்யுமாறு கௌதமர் அவளுக்கு அறிவுறுத்தினார்.) 

அன்றுமுதல் அகலிகை ஒருவர் கண்ணுக்கும் புலப்படாதவளானாள். மக்கள் நடமாட்டம் இல்லாத இந்தக் காட்டில் உனது திருப்பாதங்களால் தீண்டப் படுகிற அந்த நல்ல நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டு அகலிகை கடுமையாகத் தவமிருக்கிறாள் இங்கே! முனிவரின் மனைவியும் பிரம்மனின் குமாரியுமாகிய அகலிகையைப் புனிதப் படுத்துவாயாக"  என்று சொல்லி ராமனின் கையைப்பிடித்து முனிவர்களில் சிறந்தவரான விசுவாமித்திரன், தவத்தில் சிறந்த அகலிகையைக் காண்பித்துக் கொடுத்தார். ஸ்ரீராமன் அந்தச் சிலையைத் தனது கால்கொண்டு தொட்டான்.  அதோடு சாபம் தீரப் பெற்றவளான அகலிகையைக்  கண்டான். " நான் ராமன்" என்று சொல்லி முனிவரின் மனைவியை வணங்கினான்.  அகலிகை தன் முன்னால் நிற்கிற ராமனைக் கண்குளிரப் பார்த்தாள். 

மஞ்சள் பட்டாடை உடுத்தியவனும் ,வில்லும் அம்பும் கையில் கொண்டவனும், லட்சுமணனுடன் இருப்பவனும், புன்சிரிப்பைக் கொண்டவனும், செந்தாமரை போன்ற கண்களை உடையவனும், திருமகளைத் தாங்கிய திருமார்புடையவனும்,  நீல மாணிக்கத்தின் நிறத்தை உடையவனும், தனது தேசத்திலிருந்து பரவும்  ஒளி கொண்டு பத்து திசைகளிலும் ஒளியைப் பரப்புபவனும் , இலக்குமி நாதனும்,  ஆகிய ஸ்ரீ ராமனைக் கண்ட மகிழ்ச்சியில் விரிந்த கண்களை உடைய அகலிகை கௌதமரின் வாக்குகளை நினைவுகூர்ந்தாள். பரமாத்மாவாகிய நாராயணனே இவர் என்ற விஷயத்தைப் புரிந்துகொண்டு, முறைப்படி அர்க்யம் பாத்யம் முதலிய செயல்கள் கொண்டு ஸ்ரீராமனைப் பூஜை செய்தாள். ஸ்ரீராமனின் திருப்பாதங்கள் பட்டதால் பாவங்கள் எல்லாம் விலகிவிட்ட அகலிகை ஸ்ரீராமனின் திருப்பாதங்களை பக்தியுடன் வணங்கினாள். பக்தி என்னும் உணர்ச்சி மேலீட்டால் அவளது தேகம் மயிர்க்கூச்செரிந்தது. தொண்டையிடறலுடன் அவள் ராமனைத் துதிக்கத் தொடங்கினாள்.  " இறைவனே!  இந்த உலகில் வசிப்பவனும் நீயே ! இந்த உலகின் இருப்பிடமும் நீரே! தங்களது திருப்பாதவொளியின் தொடுகையால்  நான் எனது அத்தனை பாவங்களிலிருந்தும் முத்தி அடைந்தவள் ஆனேன். நிர்மலமான சிந்தை உடைய பிரம்மாவும் சிவனும் கூடத் தேடிக் கொண்டிருப்பவை அன்றோ தங்களது தாமரை போன்ற திருப்பாதங்கள்! இறைவனே! தங்களது திருவடிகளின் லீலைகள் ஆச்சர்யம் தருபவை தான்! மனித உருவெடுத்து வந்து தாங்கள் இந்த உலகையே மயக்கிக் கொண்டிருக்கிறீர்கள்!  கால் முதலாய இந்திரியங்கள் ஒன்றும் இல்லாதவரும், முழுமைக்கு முழுமையான வரும் , ஆனந்தமே உருவானவரும், மாயையைக் கட்டுப்படுத்துபவரும் ஆன தாங்களே எப்போதும் இங்குமங்கும் உலவிக் கொண்டு இருப்பவர் போலவும், எல்லாவிதமான செயல்களையும் செய்து கொண்டிருப்பவர் போலவும் உள்ள ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள் ! அறியாமையில் மூழ்கியவர்கள் வெறும் இந்திரியங்களுடைய  செயல்பாட்டை உங்களுடைய செயல்பாடு என்று தவறாக எண்ணுகிறார்கள். கங்கைக்கு மூன்று லோகங்களையும் சுத்திகரிக்க இயலுவது தங்களுடைய தாமரை போன்ற பாதங்களிலிருந்து உற்பத்தியான காரணத்தால் அன்றோ ! பிரபஞ்சத்தையே பாவனமாக்குகின்ற - அதாவது அனைத்துலகங்களையும் சுத்தமாக்கு கின்ற, அந்த இறைவனைக் கண்முன்னால் காணக் கிடைத்தது நான் கழிந்த பிறவிகளில் செய்த புண்ணியங்களின் பலனாலன்றோ ! மனித உருவில் அவதரித்தவனும், எல்லாவிதமான பாவங்களையும் அழிப்பவனும், ராமன் என்ற திருப்பெயர் கொண்டவனும், மிக அழகான உருவத்தைக் கொண்டவனும், வில்லை கைக்கொண்டவனும், தாமரையிதழ்களைப் போன்ற அழகான கண்களைக் கொண்டவனுமான பகவான் ஸ்ரீ ராமனை  நான் தினமும் பூஜிக்கிறேன். வேறு யாருடைய காவலும் எனக்குத் தேவையில்லை. வேதங்களே இந்தத் திருப்பாதங்களின் தூசித் துகள்கூடக் கிடைக்காமல், இன்னும்  தேடிக் கொண்டிருக்கின்றன.

தங்களுடைய தொப்புுள்  தாமரையிலன்றோ (நாபி கமலம்) படைப்புக் கடவுளாகிய பிரமனும் தோன்றினான் ! தங்களுடைய திருப்பெயர்களை அன்றோ திரிபுரமெரித்த சிவன் கூட எப்போதும் சொல்லித் துதித்துக் கொண்டிருக்கிறார் !அத்தகைய பெருமைகளை உடைய ராமச்சந்திரனை நான் எப்போதும் என் இதயத்தில் வைத்து தியானித்துக் கொண்டே இருக்கிறேன். 

நாரத மகரிஷி, பிரம்மா சிவன் ஆகியோர் தங்களுடைய திருவிளையாடல்களை (அவதார லீலைகள்) சத்திய லோகத்தில் பக்தியோடு பாடித் துதித்துக் கொண்டிருக்கிறார்கள் . வாக்தேவி என்று சொல்லப்படுகிற சரஸ்வதி தேவியும், தங்களது குணநலன்களைப் பாடுகின்ற அந்த வாக்குகளுக்குத் தலைவியாக இருப்பதற்குத் தனக்கு பாக்கியம் கிடைத்ததை எண்ணி எண்ணி ஆனந்தக் கண்ணீர் உகுத்து கொண்டிருக்கிறாள். அத்தகைய பெருமையுள்ள ஸ்ரீராமனின் திருவடிகளை நான் சரணடைகிறேன். தாங்களே பரமாத்மா!  தாங்களே பரம புருஷன்! அன்று முதல் இன்றுவரை என்றும் இருப்பவன். ஏகன்! (ஒன்றானவன்) தானே தனக்குள் ஒளியாகியிருப்பவன்.  முடிவற்றவன். ஆரம்பகாலத்திலிருந்தே உள்ளவன். உயிரினங்களுக்கு அருள் புரிவதற்காகவே, ராமன் என்ற திருப்பெயரில், மாயையால், அளவற்ற அழகு கொண்ட உருவத்தை ஏற்றுக்கொண்டு பிறப்பெடுத்தவன்.. 

எங்கும் நிறைந்த பரமாத்மாவான இறைவன் எந்தவிதக் கட்டுப்பாடும் அற்றவன்; எல்லாவிதமான சுதந்திரங்களையும் உடையவன். பரமாத்மாவின் படைத்தல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழிலின் நடப்புக்காகவேண்டி, அன்னார் தனது  பிரதிபிம்பமாக பிரம்மா விஷ்ணு சிவன் என்ற மூன்று உருவத்தில் தானே, மாயையில் தோன்றி விளங்குகிறார். பரமாத்மாவாகிய ஸ்ரீராமா ! நினது தாமரைத் திருத்தாள்களில் நான் விழுந்து கும்பிட்டு வணங்குகிறேன். அன்னை திருமகள் பக்தியோடு தனது இதயத்தில் வைத்துப் போற்றி வணங்கும் தாமரைத் திருத்தாள்கள் அன்றோ இவை ! வாமன அவதாரத்தில் மூன்று உலகங்களையும் அளந்து எடுத்த தாமரைப் பாதங்கள் அன்றோ இவை! உடலைப் பற்றிய உணர்வுகள் ஏதும் இல்லாத முனிவர்கள் எந்தக்காலத்திலும் தங்களது மனதில் வைத்துப் போற்றி தியானிக்கின்ற திருப்பாதங்கள் அன்றோ இவை! 

அனைத்து உலகங்களையும் படைத்தவனும், அனைத்து உலகங்களின் உருவாகத் தானே ஆனவனும், அனைத்து உலகங்களையும் கட்டி காப்பவனும் தாங்களே அன்றோ ! எதனோடும், யாரோடும் எந்தவிதத் தொடர்பும் இன்றி எல்லோருள்ளும்  ஆன்ம ஒளியாய் விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள் ‌.  ஓங்காரத்தால் ஊக்குவிக்கப்படுபவனாகவும், வார்த்தைகளால் வர்ணிக்கப்பட இயலாதவனாகவும் திகழ்கிறீர்கள் தாங்கள் ! வாக்குகளாகவும், அந்த வாக்குகளால் ஊக்குவிக்கப்படுகிற பொருட்களாகவும், அகில உலகமாகவும் நிறைந்திருப்பதும் தாங்களே! அகலப் பரந்து பெரிதாயிருக்கும் தன்மையின் தத்துவம்,  செருக்கின் தத்துவம், ஐம்பூதங்கள், ஆகிய இவை போன்றவை இயற்கைத் தத்துவத்தின் அடிப்படையாவதின் காரணம், நான்தான் செய்கிறேன் என்று செருக்கு அடைகின்ற மனிதன், சொர்க்கம் நரகம் போன்ற உலகங்களைச் சென்றடைவதின் பலன்,  வேள்வி முதலான செயல்கள் மற்றும் அவற்றுக்கு அடிப்படையான வேத சாத்திரங்கள், என்று இப்படிப் பலவிதத்தில் ஒளிவீசும் மாயையிலூடே,  தாங்களே பலப்பலவாகத் தோற்றமளித்துக் கொண்டிருக்கிறீர்கள்.  மாயையின் காரணமாக மனம் என்னும் பொருளைக் கடிந்துரைக்கிற, வெறுக்கிற மனிதர்கள்,  அனைத்திற்கும்  பொருளாயிருக்குமாறு உருக்கொண்ட  நின் திருவடிகளின் பெருமையை அறிந்தவரில்லை. அவர்கள், மாயையைக் கட்டுப்படுத்தி நடத்திச் செல்கின்ற, அனைத்துக்கும் தலைவனாகிய, காரணமாகிய தங்களை வெறும் மனிதனாக மட்டுமே காண்கிறார்கள். தாங்கள் ஆகாயத்தைப் போல் எல்லா பொருட்களிலும் உள்ளும் புறமும் நிறைந்து நிற்பவர் ஆவீர்கள். தாங்கள் எந்தவிதமான தூய்மையின்மையாலும் தீண்டப் படாதவர். எந்தவிதமான குறைகளும் அற்றவர். பற்றற்றவர். அசையாத் தன்மையுள்ளவர். நிலைத்திருப்பவர். தூய்மையானவர். ஞானமே உருவானவர், அதாவது அறிவுருக் கொண்டவர். உண்மையே உருவானவர். அழிக்கப்பட முடியாதவர். எங்கெங்கும் நிறைந்திருப்பவர் ஆகிய இறைவனே! நான் கேவலம் ஒரு அறிவில்லாத பெண் ! எனக்கு எப்படி இறைவனின் தத்துவம் புரியும்? எனவே மற்ற எண்ணங்களை எல்லாம் அகற்றி நான் ஒருமுகப்பட்ட நினைவோடு தங்களையே துதித்து வணங்குகிறேன் இறைவனே! பிற்காலத்தில் நான் எங்கு எந்த சூழ்நிலையில் வசிக்க வேண்டி வந்தாலும் எனக்கு எந்நேரமும் தங்களுடைய தாமரைப் பாதங்களில் மட்டுமே நிலைத்த பக்தி இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எல்லா உயிரினங்களின் தலைவனும் பக்தர்களைக் காப்பவனும், புலன்களைக் கட்டுப்படுத்துபவனும், நாராயணனும் ஆகிய எம்பெருமானே ! இறைவனே! நின் திருவடிகளை பல கோடி முறை வணங்குகிறேன். பிறவி மாயை என்னும் பயத்தை முற்றிலும் அகற்றுபவனும், அனைத்தும் ஆகி இருப்பவனும், ஒருகோடி கதிரவன் ஒன்று சேர்ந்தாற்போல ஒளிவீசுகிறவனும், கையில் வில்லேந்தியவனும், கொண்டல் நிறத்தவனும், தங்கத்தைப் போல் மின்னுகின்ற ஒளியும் நிறமும் கொண்ட மஞ்சள் பட்டு உடுத்தியவனும், ரத்தினத்தினாலான காதணிகளை அணிந்தவனும், செந்தாமரை போன்ற அழகிய கண்களை உடையவனும், எந்நேரமும் இளையோன் இலக்குவனுடன் இருப்பவனும் ஆகிய ஸ்ரீராமனை நான் துதிக்கிறேன்" 
 
தன் முன்னில் நின்ற, பரம புருஷன் என்று சொல்லப்படுகின்ற, தேவாண்மை மிக்க ஸ்ரீராமனை மேற்கண்டவாறு துதித்து வணங்கி, அனுமதி பெற்றுக் கொண்டு, அகலிகை கௌதம முனிவரின் இருப்பிடம் சென்றாள். 

அகலிகையின் துதி என்று சொல்லப்படுகின்ற இதனை பக்தியோடு படிப்பவனுடைய எல்லா விதமான பாவங்களும் விலகும் . அவன் பரப்பிரம்மம் என்று சொல்லப்படுகின்ற அனைத்தும் ஆகி நிற்கின்ற இறைவனோடு கலந்து விடுதலை பெறுவது திண்ணம்.

ஒரு ஆண் மகவை ஈன்றெடுக்கும்  ஆசையுள்ள பெண் ஸ்ரீராமனை பக்தியோடு இதயத்தில் வைத்து தியானித்து தினமும் இந்த அகல்யையின் துதியைச் சொல்லி வந்தால் கூடிய விரைவில் ஒரு நன்மகனை ஈன்றெடுப்பாள். ராமனுடைய அருளால் எல்லா நலன்களும் கிடைக்கும். கொலை செய்த பாவம் , ஆசிரியன் மனையாண்ட பாவம், திருடுதல், குடித்தல், தாயார் அல்லது சகோதரன் இவரைக் கொன்ற பாவம், உலக சுகங்களிலேயே மூழ்கிய வாழ்க்கையை வாழும் பாவம், - இப்படிப்பட்ட கொடிய பாவங்களை செய்யும் பாவிகள் கூட ரகு குலத்தின் தலைவரான ராமனை இதயத்தில் நினைத்து நிதமும் இந்த அகலிகை துதியை பக்தியோடு சொல்லிக் கொண்டு வந்தால் எல்லாப் பாவங்களும் விலகி முத்தி அடைவார் என்றால் மிகுந்த நன்மையைச் செய்யும் நல்லவர்களின் நிலையைப் பற்றிச் சொல்லவோ வேண்டும் ?

Monday, April 6, 2020

மழையின் மறுபக்கம்




மழையின் மறுபக்கம்
--------------------------------------

'கானப் பறவைகளின்
கலகலெனும் ஓசையிலே'
கண்விழித் தெழுந்தாளே 
கன்னிப் பெண்ணும் தான்!
நேற்றிரவு பெய்த மழைச் 
சிலிர்ப்புகள் அடங்கிடவும், 
சிந்தை குளிர்ந்ததுவே
சிலையாய் உறைந்ததுவே !
நினைவுகளின் மிதப்பினிலே 
கன்னம் சிவந்ததுவே !

பருவ மழையதனின் 
சின்னச் சிலிர்ப்பினிலே 
கண்கள் குழைந்தனவே 
கனவுகள் நிறைந்தனவே!

மகிழ்ச்சிப் பெருக்கதனால் 
நிறைந்த மனத்துடனே 
இயற்கை அழகதனின் 
அத்தனை நிறைகளையும் 
தனதாய் பாவித்தாள் 
தனதென்றே தான் நினைத்தாள்.

அதிகாலை அழகதனின் 
அத்தனை கலைகளையும் 
ஒருமுறை யேனும் தன் 
உடைமை ஆக்கிடவே 
உள்ளம் விழைந்திட்டாள் 
உணரத் தலைப்பட்டாள்! 
நுனிப்புல் தனிலொளிரும் 
பனித்துளி அழகதுவும்,
அழகின் சிரிப்பாகும்
அதிகாலைக் குளிரதுவும்,
அனைத்தும் தனதாக்கி 
மனத்தை நிறைத்திட்டாள்.

மங்கை தலையொசிந்து,
பலகணி தனைத்தாண்டித் 
தன்முகம் நோக்கித்தான் 
சிரிக்கின்ற மலரதனில் 
சிந்தை பறிகொடுத்தாள்!
அழகாய் தன் கவனம் 
ஈர்க்கின்ற இலைகளதன் 
ஒவ்வோ ரசைவினிலும் 
உயிர்த் தாகம் தணிவித்தாள்!

நேற்றிரவு பெய்த மழை 
நினைவுகளில் சித்திரமாய் 
நின்றதனின் விளைவுகளாம் 
இத்தனை கனவுகளும் !
மழையின் மறுபக்கம் 
தனை மனமும் உணரும் வரை 
இத்தனையும் கனவுகளாய் 
இதயம் நனைத்திடுமே !

ஊமையின் கனவுகளால்
உலகுக்குப் பயனுண்டோ ?
உண்மை உணர்வுகளை
உணரும் மனமுண்டோ ?

கி.பாலாஜி
19.03.2020
An influence of S.R.Ravi's 
'Other side of Rain

Monday, December 30, 2019

பெண்ணே வருவாய்!

A Translation of the poem 'Oh Baby Girl' 
By My friend LILY SWARN written on 11.10.2019

பெண்ணே வருவாய் !
*************************

இறுக்கிய சடையும் இதழ்க் கடை நகையும் 
அமுதை நிகர்த்த அழகிய உருவும் 
அமைந்த பெண்ணெனும் மதலை வரமே!
மற்றெதும் இணையிலா மங்கள நிறமே!

கன்னியை தேவியாய் கற்பனை செய்து 
கனிவாய் பூஜைகள் அனைத்தும் செய்து 
நவராத்திரி எனும் பண்டிகை தனிலே 
நவநவ மாய்கொண் டாடும் நாடிது !

காச்மீரம் முதல் கன்யா குமரி 
ஈறாயெங்கும் இறையெனப் பெண்ணை 
மதித்துப் போற்றும் மங்கள நாடிது!
மங்கள கௌரியாய் மகளைப் போற்றும் 
சதியும் சாவித்திரியும் நிறையும் 
வீணையும் ஏடும் எடுத்த வாணியாய் 
இன்று சக்தியாய் நாளை காளியாய் 
என்றும் பெண்மையைப் போற்றும் நாடிது !

இத்தகை அன்பும் பண்பும் ஒருபுறம் 
நிறையும் நாட்டில்தான் நீசரின் கூட்டமும் 
நிறையத் திரியும் நிம்மதி அழிக்கும்!
பெண்மையின் மானம் நசிக்கும் நரன் முன் 
நரமா மிசம் தினும் அரக்கரே மேலெனத் 
தோன்றிடும் கணங்கள் !
ஆயிரம் வாள்கொண் டறுத்திடும் மனதை  
அருவருப் பதனின் உச்சம் இதுவே !
ஊழ்வினைப் பயனோ?

மானபங்கமும் ஈனக்கொலையும்! 
இத் தரமற்ற செயல்களைச் செய்யும்
ஈனர் நிறைந்த நாடா யிதுவும் 
மாறிவிட்டதே மானம் அழிந்ததே!

யாரே நினைந்தார் இத்தகை ஈனச் 
செயல்களும் இங்கே இந்திய நாட்டில் 
இதமாய் பெண்ணைப் போற்றிய நாட்டில் 
எளிதாய் நடந்து தீரும் என்றே !

கண்ணைப் பொசுக்கும் காமத்தீ முன் 
தாயும் தாரமும் ஒன்றென வாயினர்! 
மானபங்கமும் மகளிர் கொலையும் 
செய்யும் மக்கள் வாழும் நாட்டில் 
வாழ்வதும் பாவம் ! 
வீழ்ந்து மாயும் செயலே சாலும்!

இல்லை! இல்லை! பெண்ணே போற்றி!  
பெண்மை என்பது பேடிமை இல்லை 
ஏற்றம் கொண்டு எழுவாய் நீயும் 
சீற்றம் கொண்டு சீறிடுவாயே !

அழிந்த சாம்பல் அதனில் இருந்து 
அழகாய் உருப்பெற் றெழுவாய் நீயும் 
அரக்கர் தம்மை அழித்திட வென்றே 
ஆற்றல் தன்னைக் காட்டிட வென்றே!

ஈடு செய்யவே இயலா நட்டம்! 
இருப்பினும் சும்மா விடலாகாது !
பீனிக்ஸ் பறவை போலே நீயும்! 
பிடைத்து எழுந்து பறப்பாய் நீயும்!

ஏதேனும் ஓர் உருவில் தோன்றித்
தேறா மாந்தர் தீயோர் தம்மைத் 
திறம்பட அழித்துத் தருமம் என்பது 
இதுவெனக் காட்டி ஈடு செய்வாய்!

வெந்திடும் பாலை தனிலும் நீயோர் 
பூமணம் எனவே பரவிட வாராய் !
வெற்று மணலாய் நிறைந்திடு நதியின் 
பாதையில் பாற்கடல் எனவே வாராய் !

அன்பே மணமாய் எங்கும் நிறைவாய்! 
அன்பெனும் ஊற்றாய் பொங்கிப் பெருகி 
அன்பே உலகின் முதல் என உணர்த்தி 
அன்பே பெண்ணே வருவாய் நீயும் !

அன்பெனும் பண்பால் புன்மைக ளெல்லாம் 
அகன்றே யோடிட அருளாய் வருவாய் !
அனைத்தும் மறந்து அழகே உருவாய் 
அன்பே பெண்ணே வருவாய் நீயும் !
அன்பே பெண்ணே வருவாய் நீயும் !

கி.பாலாஜி
13.10.2019
இரவு 11.10

A Translation of the poem 'Oh Baby Girl' 
By My friend LILY SWARN written on 11.10.2019
Which is given below: 

On International Day of the Girl child 

Ni kudiye!
(O baby girl)

Tightly curled pink hands 
Bundles of delight 
Swaddled in pink blankets 
Cherubic Angels with ruby lips 
Baby girls made of all things sweet and spice 
Daddy's little girls and mama's heartbeats 
Rosy hues with fairy wings 
Gossamer shimmer on dainty tips 

Long haired Devis in temples of yore 
Adorned with tiaras in Nepal's mountains up high 
Goddess incarnate in Indian legends 
A Sati , Savitri or Veena Pustak Dharini 
Shakti today and Kali next 
The slayer of demons astride a tiger

Who would have known that the land that worships you 
Will treat you so harshly ? 
Gang raped and throat slashed ?
Whipped , beaten in the shelter of four walls 
Your body marauded , your spirit crushed ?
Servile , meek and left to die 
With full blown AIDS in halls of hell ?

No , you don't give in ,you wondrous one 
You awake from your ashes and snarl at your deflowerer 
You arise like the Phoenix and devour the demons
You are the beatific light of love 
You infuse the streams with the milk of love 
You perfume the desert with the scent of musk 
You are love , love , love 
Grateful to have you my baby girl !

Copyright Lily Swarn 11.10.2017

Monday, April 22, 2019

சங்கு புஷ்பம் மலரும் போது ...ராகம்: தேஷ்

சங்கு புஷ்பம் மலரும் போது
சகுந்தலை உந்தன்  நினைவு வரும்
அந்திமாலைகள் ஆடை மாற்றும் போது
சகுந்தலை உந்தன்  நினைவு வரும்
சகுந்தலே ......சகுந்தலே.          (சங்கு)

வானத்தைக் குளிர்ச்சியால்
நனைத்திடப் பௌர்ணமி
மண்குடமேந்தி நடக்கையிலே
நீளக்கருவிழி மேகங்கள் உரசிட
நின்னைக் குறித்தே நினைவு வரும்
நின்னைக் குறித்தே நினைவு வரும்
சகுந்தலே ......சகுந்தலே.           (சங்கு)

தாமரையிலைதனில்
பைங்கொடிப் பெண்ணாள்
காதல்  கடிதம் எழுதுகையில்
கருநீலக் காடுகள்
மலர்மெத்தை விரிக்கையில்
நின்னைக் குறித்தே நினைவு வரும்
நின்னைக் குறித்தே நினைவு வரும்
சகுந்தலே ......சகுந்தலே.            (சங்கு)

--கி. பாலாஜி
06.04.2018

பாடல் மூலம்- மலையாளத் திரைப்படம் சகுந்தலா
"சங்கு புஷ்பம் கண்ணெழுதும் போள்"
எழுதியவர்: வயலார் ராமவர்ம

மூலமொழிப் பாடலின் மெட்டு மாற்றாமலேயே

மொழிபெயர்க்கப்பட்டது.

செல்லமே உந்தன்......

செல்லமே உந்தன் சிவந்த கன்னம் கண்டு
ராகம் : தேஷ்

செல்லமே உந்தன் சிவந்த கன்னம் கண்டு
கவலையில் கருத்தது அந்தி வானம்
கார் முடிக்கற்றையின் காரொளி தனைக் கண்டு
முகம் வெளுத் தொளிந்ததோ முன்னிருட்டு.       (செல்லமே)

காலம் கடந்தது தெரியவில்லை - நாமோ
காரிருள் பகல் ஏதும் அறியவில்லை
பிரிந்தவர் நாம் கூட பேசுவது எங்கே
பின்னும் முன்னும் அறிவது எங்கே.                       (செல்லமே)

இருள் சூழ் நேரத்தில் என் முன்னில் நீ வர
இன்முகம் கதிரொளி தனை வீசும்
பகலவன் காய்கையில் பக்கத்தில் நீ வர
மதிமுகம் தண்ணொளி தனை யீயும்.                       (செல்லமே)

கண்மணி நீ என் கரம் பிடித்துடன் வந்தால்
கால மாற்றங்கள் தெரியாது
காலமாம் கன்னிப் பருவமும் நீயே
கடல் வான் புவி அழல் காற்றும் நீயே.                        (செல்லமே)

K.Balaji
March 27 2019
11.45 pm

ഓമനേ നിൻ കവിൾ കുങ്കുമം കണ്ടപ്പോൾ Oman's non kaviL kunkumam kaNdappOL என்ற மலையாளப் பாடலின் மொழிபெயர்ப்பு

இதற்கு நண்பன் ராம் சரசுராமின் விமர்சனம் :

"மன்னிக்கணும்ப்பா. இன்று முழுவதும் பிஸி. பிஸியாக இருப்பது என்பது வரமா சாபமா தெரியவில்லை. அம்மாவுக்கு கைகளில் கொஞ்சம் பிரச்சனை இருக்கிறது. ஸ்கின் ப்ராப்ளம். எத்தனை சொன்னாலும் கேட்காமல் அந்த கைகளிலேயே பல வேலைகள் பார்ப்பார்கள். அது அவரது குணம். மாற்றுவது கடினம். ஆகவே அந்த பிரச்சனை கொஞ்சம் சரியாகும். பிறகு தொடரும். இதுவொரு தொடர்கதை. இன்னைக்கு அது சம்மந்தமாக ஒரு டாக்டரிடம் போக வேண்டி இருந்தது. மதியம் 1 மணிக்கு மேல் அப்பாயிண்ட்மெண்ட். கொழுத்துகிற வெய்யில். வெய்யிலின் எதிரொலியில் வண்டியில் வியர்வை சிந்த ஒரு பயணம். கிட்டத்தட்ட 30 கிமீ. திரும்பி வரும் போதும் அந்த வெய்யில் வெளியே காத்திருந்து மீண்டும் என்னைத் துரத்த தொடங்கியது. வீட்டிற்கு வந்துதான் உங்கள் மொழிபெயர்ப்பு கவிதையை படிக்கத் தொடங்கினேன். "செல்லமே உந்தன் சிவந்த கன்னம் கண்டு.." நிஜமாய் இந்த ஆரம்ப வரியிலேயே அசந்து போனேன். என்னவொரு க்யூட்! ஒரு குழந்தையின் குண்டு கன்னம் மாதிரி.! தொட்டுத் தொட்டு படிக்கத் தோன்றியது. அதற்கு அடுத்த வரியிலேயே கற்பனை இன்னும் அழகாய் சிறகடித்தது. "கவலையில் கருத்தது அந்தி வானம்..".
காதல் உலகத்தின் அற்புதம். அதுதான் இந்த காலத்தையே நகர்த்துகிறது. அந்த உணர்வே இந்த வாழ்வின் உன்னதம். அதை கொண்டாடத் தெரிந்தவனே வாழ்கிறான். "காலம் கடந்தது தெரியவில்லை - நாமோ
காரிருள் பகல் ஏதும் அறியவில்லை.." "கண்மணி நீ என் கரம் பிடித்துடன் வந்தால்
கால மாற்றங்கள் தெரியாது."   இந்த வரிகளில் அந்த காதலின் நிலை இன்னும் கவித்துவமாகிறது. அதிலும் "பகலவன் காய்கையில் பக்கத்தில் நீ வர
மதிமுகம் தண்ணொளி தனை யீயும்.." - வாவ்! என்னவொரு அழகு! ஏம்ப்பா அந்த ஒரிஜினல் கவிதையில் இவ்வளவு அழகான வார்த்தையும் கவித்துவமும் இருந்ததா? இல்லை அது இன்னும் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக உங்கள் கற்பனைகள் செய்த வேலையா? மொழிபெயர்ப்பு கடினமான பணி! அந்த மொழிக்கு இணையான வார்த்தைகளை தேடி, அந்தக் கவிதையில் அந்த கவிஞன் என்ன உணர்ந்தானோ அந்த உணர்வை நம் மொழியில் தருவதென்பது கடினமான இலக்குத்தான். அதை உங்கள் உழைப்பும் கற்பனையும் அற்புதமாய் செய்திருக்கிறது. "செல்லமே உன் சிவந்த கன்னம் கண்டு" வை உங்கள் குரலிலும் கேட்கக் கிடைத்ததுதான்ப்பா நான் பெற்ற பேரின்பம்! அந்த கவிதை வரிகளுக்கு இன்னும் ஒளியூட்டியது என்னை பொறுத்தவரை உங்கள் குரல்தான். அதுதான் என் எதிர்பார்ப்பு! அதற்கு என் நன்றிகள்ப்பா.  நீங்கள் எனக்குக் கிடைத்ததை ஒவ்வொரு நொடியும் பெருமைப்படும் என் மனம் இன்றும் இன்னும் ஒரு படி மேலே போய் காலரை தூக்கி விட்டு பெருமைப்பட்டுக் கொண்டது. இந்தத் தமிழ் போல் என்றும் நீங்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதே என் பிரார்த்தனை! இன்று பகல் முழுவதும் என்னையே சுற்றிக் கொண்டிருந்த வெய்யில் இந்த கவிதையைப் படித்த பின் சட்டென விலகிப் போனது. வராந்தாவில் அமர்ந்து வானம் பார்த்து கொண்டேதான் இதை எழுதுகிறேன். அடித்த காற்றில் அவ்வளவு குளிர். அது இந்த கவிதையில் பிறந்த குளிர்!! நன்றிப்பா. நிறைய நிறைய எழுதுங்கள். அது எங்கள் மனதிலும் வந்து நிறையட்டும். வாழ்த்துக்கள்!!
👏👌👍💐😊🙏"

Friday, October 19, 2018

உலர்ந்த சருகின் உற்சாகம் !


உலர்ந்த சருகாகி யோர் 
மூலையில் விழுந்துவிட்டேன்!


பயனற்ற பொருளாகி யோர் 

பாரமாய் நின்றுவிட்டேன் !

பட்டயம் கட்டப்பட்ட 
பல்லக்குக் குதிரை யொன்று 
பார்க்கவோ ராளின்றிப் 
பாதையின் ஓரத்தில் 
பரிதவித்து நிற்கிறது !




காலத்தின் மாற்றத்தால் 

கண்ணியங்கள் மறக்கப்படும்! 
கற்பூரம்போலக் 
காற்றில் கரைக்கப்படும்!

என்றாலும் மனத்தின் 
ஏதோவோர் மூலையிலே 
நம்பிக்கையின் கீற்றொன்று 
மெல்லப் புறப்பட்டு 
மேனியைச் சிலிர்க்க வைக்கும்!
மேன்மைகள் நிலைக்கவைக்கும்!
கடந்த காலத்தின் சிறப்பெல்லாம்
கல்லோவிய மாகிக் 
களிக்கவைக்கும்!
கண்களைக் குளிரவைக்கும்!


--Translation and picture : K.Balaji

Above is a translation done by me, 
of the following poem by my friend

A leaf of life

I shrivelled up and aged 
Useless and burdensome 
A horse put to paddock 
Blown away to a corner 
Soon to be forgotten 
A lost hope 


Copyright Lily Swarn 13.10.2016

Thursday, September 27, 2018

பனித்துளி நாட்டியம்


பனித்துளி நாட்டியம்
***********************


பச்சை இலைகளின் 
மேலே ஆடும் 
பனித்துளிகளின் 

பரதநாட்டியம்!
இலைகளின் நரம்பின்
ஊடே ஓடும் 
இம்மி அளவே 
துளிகள் ஆடும்!
மதில் மேல் பூனை 
என்னும் பழஞ்சொல்
மனதினில் வந்து 
நிற்கும் போகும் 
வெள்ளித் துளியாய் 
மனதில் நிறைந்து 
வைரத் தொளியாய்
நெஞ்சை நிமிர்த்தும்!

நிலவின் அமுதத்
துளிகளை விழுங்கி
நெஞ்சம் போதை 
தனில் தள்ளாடும்!!
பருவ மாற்றம் 
தருமோர் பசுமை 
உள்ளம் நிறைக்கும் 
உவகை ஊற்றாய்!

கோடி கோடியாய் 
இன்பம் மனதைக் 
கொள்ளை கொண்டு 
போயிடும் எனினும்
அத்தனையும் ஓர் 
அரைக்கண வாழ்வே! 
ஆடும் பனித்துளி 
போலே மறையும்!

அடுத்த கணத்தில்
இல்லா தாகும்!

கண்களின் வழியே 
கண்ணீர்த் துளியும்
பனித்துளி போல் தான் 
படபடத் திறங்கிக்
கன்னக் கதுப்பினில் 
சரிந்தே ஓடும் 
காவியக் கனவுகள் 
கலைந்தே போகும் !

கண்ணிமை கனக்கும் !
காலம் சிரிக்கும் !
கணமோ யுகமாய்
பரந்து விரியும் !

-- கி. பாலாஜி
27.09.2018

Lily Swarm அவர்கள் எழுதிய dew drops என்ற கவிதையின் மொழிபெயர்ப்பு.
This is a translation in Tamil,  of the English poem titled
 'Dew Drops' by Lily Swarn.

I have rendered the poem and it can be heard by clicking the following Link: 


The Original lines by Lily Swarn in English are given below :

Dew drops 

Ballerinas dancing on green leaves 
Like cats on hot tin roofs 
Glimmering and luminescent 
With hearts of diamonds 
Little moon drops drunk on life 
Staggeringly high on monsoon madness 
Coruscating inside their wet insides 
Bubbles of enchantment 
With tiny life spans 
Dew drops like tear drops 
Wiped off the cheek 

Copyright Lily Swarn 27.9.2018
Pic. (C) Lily Swarn

அத்யாத்ம ராமாயணம் - வேள்விக் காப்பு /அகலிகையின் துதி

பராசக்தி 🙏 This is a Translation of a portion from the Malayalam Book "Adyaathma Ramayanam Malayalam - SwamiChidananda Saraswathi , wh...